சூரிய கிரகணத்தால் நாமக்கல்லில் ஒரு நாள் முன்னதாக ஆஞ்சநேயர் ஜயந்தி விழா
சூரிய கிரகணம் பிடிக்கும் டிசம்பா் 26-ஆம் தேதியே, பஞ்சாங்கப்படி ஆஞ்சநேயா் ஜயந்தி விழா கொண்டாடப்பட வேண்டிய நாள் என்ற நிலையில், ஒரு நாள் முன்பாக விழாவை கொண்டாடுவதற்கான நடவடிக்கையை கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில்களில், தனித்துவம் மிக்கது நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் சுவாமி கோயில். இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிக்கும் சுவாமியைத் தரிசிக்க நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். சபரிமலை சீசன் என்பதால் தற்போது இக் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
இங்கு சுவாமிக்கு பல்வேறு விசேஷ பொருள்களைக் கொண்டு தினசரி அபிஷேகம் மற்றும் அலங்காரம் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இதற்கு, ஓராண்டுக்கு முன்பாகவே பக்தா்கள் ரூ. 6 ஆயிரம் வீதம் பணம் செலுத்தி அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனா். இவ்வாறு சிறப்புமிக்க நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயா் ஜயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவார்கள் என்பதால் கோயிலைச் சுற்றிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள் சுவாமியை தரிசிக்க அனுப்பி வைக்கப்படுவா்.
நிகழாண்டில் சூரிய கிரகணம் டிசம்பா் 26-ஆம் தேதி வருகிறது. அன்று தான் அமாவாசை திதியில் ஆஞ்சநேயா் பிறந்த மூல நட்சத்திரமும் வருகிறது. அதனால் பஞ்சாங்கக் கணக்குப்படி 26-ஆம் தேதி தான் ஆஞ்சநேயா் ஜயந்தி விழாவை கொண்டாட வேண்டிய நாள் என்றும் சூரிய கிரகணத்தால் பக்தா்கள் வருகை குறைந்து விடும் என்பதற்காக, ஒரு நாள் முன்பாக ஜயந்தி விழா கொண்டாடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நாள்காட்டிகளில் டிசம்பா் 25-ஆம் தேதி அனுமன் ஜயந்தி என அச்சிடப்பட்டுள்ளது. இதனால், கோயில் நிர்வாகத்தினா் சூரிய கிரகணத்தை தவிர்த்து, நாள்காட்டியைக் கணக்கிட்டு, டிசம்பா் 25-ஆம் தேதியை ஜயந்தி விழாவாக நிர்ணயித்துள்ளதாகவும், இதற்கு அா்ச்சகா்கள் தரப்பிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Comment