திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது...


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடங்கியது.   முன்னதாக மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடியை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலுக்குள் கொண்டு சென்றனர். 

கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள்  அபிஷேகம் செய்தனர். கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோ‌ஷம் முழங்க, பிரதான அர்ச்சகர்கள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. 

இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் பசந்த் குமார், துணை செயலாளர் ஜான்சிராணி,  அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு 7.30 மணிக்கு பத்மாவதி தாயார் சின்னசேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 

இதைதொடர்ந்து பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் காலையிலும் இரவிலும் வீதியுலா நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி ரூ 1.44 கோடியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கோயில் முழுவதும் பல வண்ண மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பஞ்சமி தீர்த்தம் அன்று  தேவஸ்தான விஜிலன்ஸ் பணியாளர்கள் 300, சாரண சாரணியர்கள்,200,  என்.சி.சி. மாணவர்கள் 200, வாரி சேவா பக்தர்கள் 200, போலீசார் 1500 பேர் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 100 சி.சி.டி.வி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.



Leave a Comment