கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்.... அற்புதமான வீடியோ காட்சி


கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று இந்த கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இக்கோவிலில் உள்ள 62 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு காஞ்சி சங்கராமட நிர்வாகிகள் சார்பில் 35-வது ஆண்டாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. 

முன்னதாக காஞ்சி சங்கராமட நிர்வாகி விஜயேந்திரர் அன்னாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை கொண்ட பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். பின்னர் மாலை 5 மணி வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன.

இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று பிரகதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.



Leave a Comment