மகத்துவம் வாய்ந்த சனி மகா பிரதோஷம்!
மற்ற கிழமைகளில் பிரதோஷம் வந்தால், பிரதோஷம் என்று மட்டும் சொல்லுவார்கள். ஆனால் சனி பிரதோஷத்தை சாதாரணமாகச் சொல்லமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.
ஏழரைச் சனி மற்றும் அஷ்டமத்துச் சனி நடப்பவர்களும் இது வரை வாழ்க்கையில் நல்லதே நடக்கவில்லை என்று புலம்புவர்களும் இன்று சிவ சந்நிதியில் நில்லுங்கள். எல்லா சத்விஷயங்களும் கிடைக்கப்பெறுவீர்கள் என்பது உறுதி. இன்று சனிப் பிரதோஷம்!
இன்று அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். முடிந்தால் கையளவு வில்வம் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் வழங்குங்கள். சிவனாருக்கு வில்வத்துடன் செவ்வரளியும் வழங்கி தரிசியுங்கள்.
இன்னும் முடியுமெனில், நந்திதேவருக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். குளிரக் குளிரச் செய்கிற அபிஷேகத்தால், உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் குளிரப்பண்ணுவார் சிவனார்!
சனிக்கிழமை வரும் பிரதோஷம். நம் ஜாதகத்தில், எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம் என்கின்றன ஆகமங்களும் சாஸ்திரங்களும்!
ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். பொதுவாகவே, ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம்.
கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
Leave a Comment