நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு செய்ய....
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2020-ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு செய்ய கோயில் மண்டபத்தில் வரும் 10-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 18 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும், ஆஞ்சநேயரை தரிசிக்க, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி, தங்கம், முத்தங்கி உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படும்.
வரும் 2020-ஆம் ஆண்டு முழுவதும் தினசரி அபிஷேகத்திற்கான முன்பதிவு, நவம்பர் 10-ஆம் தேதி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழ் மாதப் பிறப்பு ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற நாள்களில் அபிஷேகம் கட்டளைதாரர்கள் மூலமாகவே நடைபெறும்.
இது குறித்து கோயில் உதவி ஆணையர் பெ.ரமேஷ் கூறியதாவது:
ஒவ்வோர் ஆண்டும், அடுத்த ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு நவம்பர் மாதத்தில் தொடங்கும். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான தினசரி அபிஷேக முன்பதிவானது நவ.10-இல் தொடங்கி முழுமையாக நிறைவேறும் வரை நடைபெறும்.
சுவாமிக்கு, தினமும் 1008 வடைமாலை சாத்தப்பட்டு, அதன்பின், நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சொர்ணாபிஷேகத்திற்கு பின் ஆஞ்சநேயருக்கு மாலைகள் சாத்துப்படி செய்து சிறப்பு அலங்காரம் நடைபெறும்.
இந்த அபிஷேகம், அலங்காரத்தை, ஆரம்பத்தில் 3 பேர் இணைந்து செய்யும் வகையிலே இருந்தது. 2017-க்குப்பின் 5 பேர் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டது. ஒருவருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேருக்கு ரூ.30 ஆயிரமாகும். பிரசாதம் பகிர்ந்து அளிக்கப்படும். முழுத்தொகையையும் முன்பதிவின்போதே செலுத்திட வேண்டும்.
ஆண்டின் 365 நாளில் தங்களுக்கு விருப்பமான நாள்களை, கோயில் விசேஷ நாள்களை தவிர்த்து, பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
Leave a Comment