சூரபத்மனை வதம் செய்ய குமரப்பெருமானுக்கு வேல் வழங்கிய வெயிலுகந்தம்மன்
திருச்செந்தூர் என்றாலே ஆறுபடை வீடுகளில் 2 ம் படை வீட்டில் அமர்ந்திருக்கும் செந்திலாண்டவ பெருமாள் தான் அனைவரது கண் முன்பும் வந்து நிற்கும்.அதே போல் சிறப்பு வாய்ந்த மற்றொரு கோவிலும் திருச்செந்தூரில் அமைந்து உள்ளது. அந்த கோவிலின் பெயர் வெயிலுகந்தம்மன் திருக்கோவில். இக்கோவிலில் விற்றிருக்கும் அம்மன் பெயர் ஸ்ரீ வெயிலுகந்தம்மன். தல விருட்சம் பன்னீர் மரமாகும் ,தீர்த்தம் வதனாரம்ப தீர்த்தம். இந்த தீர்த்தம் சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. இந்த கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோவிலின் சிறப்பு!
வெயிலுகந்தம்மன் திருக்கோயில், சூரபத்மனை வதம் செய்த கந்தனுக்கு பராசக்தி, பலவடிவம் கொண்டு கைகொடுத்த திருத்தலம் ஆகும். கந்தபுராணத்தின்படி, முருகப்பெருமான் பத்மாசூரனை அழிப்பதற்கு முன்பே அவருடைய தாய் பராசக்தியானவள் திருச்செந்தூரில் அமர்ந்தருளியிருக்கின்றார். பத்மாசூரனை பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவனை அழிப்பதற்கு முருகப்பெருமான் இங்கு வந்து தன் தாயை வணங்கி வேண்டி நிற்க, அன்னையும் கருணை கூர்ந்து தன் மகனுக்கு வெற்றி தரும் சக்தி வேலை கொடுத்தபடியினால், ‘வேல் உகந்த அம்பாள்’ என்று இந்த அம்பாள் அழைக்கப்பட்டார். அதுவே பின்பு பேச்சு வழக்கில் “வெயிலுகந்தம்மன்” என்று மருவி வழங்கலாயிற்று. அதன்பிறகே அன்னையின் ஆணைப்படி இந்நகரை முருகப்பெருமான் நிர்மாணித்ததாக கூறப்படு கிறது.
சூரபத்மனுடன் நடந்தபோரின் போதும் அன்னையே பல வடிவம் கொண்டு போருக்கு உதவினாள். சூரனை அழித்ததினால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்து தவம் இயற்றும்படி அன்னை ஆணையிட, அதன்படியே சுப்பிரமணியரும் செய்திட்டார். பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தையும், ஜபமாலையுடன் தவமியற்றும் கோலத்தில் சுப்பிரமணியர் இருக்கும் கோலத்தையும், திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்றும் காணலாம். அன்னையும், கிழக்கு முகமாக சிவபூஜை செய்யும் தன் மகனை ஆசீர்வதிக்கும் கோலத்தில் பத்திரகாளி அம்மன் அம்சத்தில் அருள்பாலிப்பதை(கோவிலுக்கு சற்று தொலைவில்) காணலாம்.
சூரசம்ஹாரம் நடை பெறும் நாளுக்கு முந்தைய இரவு, முருகப்பெருமானே சூட்சும உருவில் இத்திருக்கோவில் வந்து தன் அன்னைக்கு பூஜை செய்து அருள் பெற்று வேல் வாங்கி செல்வதாக ஐதீகம். எனவே அன்று இரவு பூஜை செய்யும் பாத்திரங்கள் தயாராக வைக்கப்பட்டு கோவில் திருக்காப்பிடப்படுகிறது. அம்மன் இவ்வூரின் வடக்கே கோவில் கொண்டுள்ளதால், இவளே ஊர் காளியாகவும் வணங்கப்பட்டு வருகிறாள். திருச்செந்தூரின் முக்கியமான பிரசித்தி பெற்ற தீர்த்தமான வதனாரம்ப தீர்த்தம் இங்குள்ளது. இந்த தீர்த்தம் ஏற்பட ஒரு சுவையான கதையும் உண்டு.
கி.பி.எட்டாம் நூற்றாண்டில் ஆண்டுகளுக்கு முன்பு, வரகுண பாண்டியன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாது கவலையுற்றான். திருச்செந்தூர் வந்து சஷ்டி விரதம் இருந்த பின் மன்னனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும் உடல் மனித உருவிலும் இருந்தது கண்டு மன்னன் மேலும் மனதொடிந்தான். கந்தனிடம் தன் குறையையெண்ணி நெஞ்சுருக வேண்டி நின்றான் மன்னன். அவனது கனவில் காட்சிகொடுத்த கந்தப்பெருமான், “அன்னை பார்வதி தேவியால் மட்டுமே போக்க முடியும். எனவே, நீ அன்னையிடம் போய் நில்; அபயம் அளிப்பாள்” என்று சொன்னார். அதன்படி மன்னனும் காடுமலை கடந்து வெயிலுகந்தம்மன் திருத்தலத்தை அடைந்தான். அங்கே அன்னையிடம் தனது மகளின் குறைதீர வேண்டுதல் வைத்தவன், அங்கேயே குடில் அமைத்துத் தங்கிக் கடும் விரதமும் மேற்கொண்டான்.
அவனது வேண்டுதலுக்கு இறங்கி வந்த அன்னையவள், “ஆடிச் செவ்வாயில், என்னெதிரே இருக்கும் இந்தக் கடலில் இறங்கித் தீர்த்தமாடினால் உன் குழந்தை சுய உருவம் பெறுவாள்” என்று அசரீரியாய் அருள்வாக்கு தந்தாள். அதுபடியே அன்னையை நெஞ்சில் நிறுத்திக் கையில் குழந்தையுடன் கடலில் இறங்கினான் மன்னன். அதுவரை ராட்சத அலைகளால் ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல் சாந்தமானது. மன்னன் கடலில் மூன்று முறை மூழ்கி எழுந்தபோது குழந்தையின் முகம் மனித முகமாக மாறியிருந்தது. குழந்தையின் வதனம் மாறிய இடம் என்பதால் இந்த இடம் ‘வதனாரம்ப தீர்த்தம்’ என்று பெயரானது. மகளின் அழகு முகம் பார்த்து ஆனந்தம் கொண்ட பாண்டியன், குழந்தையின் உடம்பில் மஞ்சளும் குங்குமமும் கலந்த நலங்கு மாவு பூசி, அரளி மாலை அணிவித்து அலங்காரம் செய்து அன்னையை தரிசிக்கச் சென்றான். சன்னிதிக்குப் போனதும் அன்னையின் முகம், குதிரை முகமாக மாறி இருந்தது கண்டு திடுக்கிட்டான். அரசன் இதயம் நெகிழ்ந்து பதறி அம்மனிடம் கேட்டான்.
“இங்குவந்து அம்மா என்றழைக்கும் எனது குழந்தைகளுக்கு அவர்கள் கேட்பதை என்னால் கொடுக்காமல் இருக்க முடியாது. நீ செய்த கர்ம பலன்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை நான் ஏற்றுக் கொண்டேன். உனது கர்ம பலன் தீர்ந்ததும் இதோ எனது இந்த குதிரை முகமும் மாறிவிடும்” என்று கூறினாள். அதன்படியே சிறிது காலம் கடந்த பின் அன்னையின் முகம் மாறியது. அதன்பிறகு வரகுண பாண்டியன் அம்மனுக்குக் கோயில் எழுப்பி நிலங்களை மானியமாக எழுதிவைத்தான். இன்றைக்கும் வதனாரம்ப தீர்த்தத்திற்கு அந்த மகத்துவம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆடி செவ்வாய்களில் அதிகாலையில் பெண்கள் வதனாரம்பரத் தீர்த்தத்தில் நீராடி நலங்கு மஞ்சள் அணிந்து செவ்வரளி மாலை அணிந்து அன்னையை வணங்கினால் முகம் அழகு வடிவம் பெறுவதோடு தீர்க்க சுமங்கலிகளாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
ஆவணி மற்றும் மாசி திருவிழாவின் பத்தாம் திருநாள் அன்று அம்மன் கடலில் தீர்த்தவாரி செய்து முருகப்பெருமான் எதிரில் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளி சண்முகருக்கு நேர் எதிர் சேவையாகி தன் மகனுக்கு ஆசிகளை வழங்கி, ‘இனி உனது உற்சவம்(திருவிழா) சிறப்பாக நடைபெற நான் உறுதுணையாக இருப்பேன்’ என்று உறுதி கூறுவதாக ஐதீகம். பின்பு அன்னை மற்றும் சண்முகருக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறுகிறது.
Leave a Comment