அய்யனின் படைப்பு + அம்மையின் ஆயுதம் = முருகனின்  சூரசம்ஹாரம்!!!!


தனித்தமிழ் கடவுள் என்ற சிறப்பு பெற்றவன் முருகன்; சூரபதுமன், 'நான்' என்கிற அகங்காரமும், 'என்' என்கிற மமகாரமும் அமையப் பெற்ற, ஓர் அரக்கன். நம் அழகன், சூரபதுமன் என்கிற அரக்கனின் ஆணவத்தை அடக்கி, அவனை ஆட்கொள்ளவும், தேவர்களின் துயர் போக்கவும், இறைவனால் நிகழ்த்தப் பெற்ற ஒரு திருவிளையாடல் தான், சூரசம்ஹாரம்.

மிகப்பெரிய யாகங்கள், தவங்கள் செய்து, சிவபெருமானின் நன்மதிப்பைப் பெற்ற சூரபதுமன் என்ற அரக்கன், 'என்னைக் கொல்ல இந்த ஏழுலத்திலும், யாருக்கும் வல்லமை இருக்கக் கூடாது; மேலும், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான், எனக்கு அழிவு வர வேண்டும்...' என, புத்திசாலியாகவும் வரம் வாங்கிக் கொண்டான். 

முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும், பொறுக்க முடியாத தொந்தரவுகளைச் செய்யத் துவங்கினான் சூரபதுமன். ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில், சிவன், தன் அதோமுகத்தின் மூலம், ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்து, ஆறு தெய்வக் குழந்தைகளை உருவாக்கினார்; அக்குழந்தைகளை, ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். சிறிது காலத்திற்குப் பின், சிவபெருமான், அக்குழந்தைகளை ஒன்றிணைத்து, ஆறுமுகன் கடவுளை தோற்றுவித்தார். அன்று தான், தீமைகளை வெல்லும் புனிதம் படைக்கப்பட்டதாய் கூறப்பட்டது.

அழகனின் தோற்றம், ஈசனின் பங்கோடு முடியவில்லை. தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி, வேல் ஒன்றை அளித்தாள் சக்தி தேவி. நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் என்ற தலத்தில் தான், தன் தாயிடம் வேலைப் பெற்றார் முருகப் பெருமான். 'சிக்கலில் வேல் வாங்கி, செந்துாரில் சூரசம்ஹாரம்' என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு, முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயமும், ஆண்டுதோரும் நடக்கிறது. 

அய்யனின் படைப்பும், அம்மையின் ஆயுதமும் இருக்கும் ஆசியால், முருகன், அரக்கன் சூரபதுமனுடன் போரிட்டான்; தான், தனி ஆள் இல்லை என, தன் தளபதி நவவீரர்களின் தலைவன் வீரபாகுவுடன் கைகோர்த்து, அரக்கனை எதிர்த்தான்.
 
சூரபதுமன் அவ்வளவு எளியவானா என்ன, உடனே ஒரு வேல் எறிந்ததும் அழிந்து போக! அவனும் பல உருவமாக மாறி, முருகனுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.  நம் பால முருகன் சிறுவனாயிற்றே... பயந்து போகட்டும் என, மாமரமாய் உருமாறி, அதை முருகனின் வேல் இரண்டாக பிளக்க, அதில் ஒன்று சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் உருமாற்றினான் சூரபதுமன். முருகனே, தன் வேலாயுதத்தால், சூரபதுமன் உடலை இரண்டாக பிளந்து, சேவலாகவும், மயிலாகவும் மாற்றிக் கொண்டான் .

என்பதும், மற்றுமொரு வரலாறு! போரின் இறுதி கட்டம் வந்தது. நம் அழகன் முருகன், சூரபதுமன் உருமாறிய சேவலை கொடியாகவும், மயிலை தன் வாகனமாகவும் மாற்றி, வெற்றி முழக்கமிட்டான். இந்த நிகழ்ச்சியின் நினைவுகூறல் தான், இன்று பல திருத்தலங்களில் நடைபெறும், சூரசம்ஹாரம் வழிபாடு!

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவில், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நாளை மாலை நடக்கிறது. சூரசம்ஹாரத்தோடு, இன்றைய விழா முடிவடைந்து விடுவதில்லை. தேவர்களுக்கு, முருகன் செய்த மாபெரும் உதவிக்கு கைமாறாக, தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்து வைத்தான் இந்திரன். எனவே, மறுநாள், முருகன் - தெய்வானை திருமண வைபவத்தோடு தான், விழா நிறைவு பெறுகிறது.
 



Leave a Comment