திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்....


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுவருகிறது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதமிருந்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை மணலை ஜே.சி.பி இயந்திரம் மூலம் சமதளமாக்கப்பட்டு வருகிறது. கோவில் கடற்கரை, சுற்றுபிரகார வீதிகள் மற்றும் நகரின் பிரதான வீதிகளில் 70 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு மற்றும் 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

தென்மண்டலத்தில் இருந்து 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்கு 10 இடங்களில் அகன்ற  எல்.இ.டி., டிவிகள் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
 



Leave a Comment