கந்த சஷ்டி விழா: தங்கச் சப்பரத்தில் திருச்செந்தூர் முருகன் 


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தார். 

இக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30- க்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு  அபிஷேகமும் நடைபெற்றது. 

யாகசாலையில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தார். அப்போது சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் சண்முகவிலாசத்தில் குவிந்தனா்.

மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அருள்பாலித்தார். 

வரும் நவம்பா் 2-ம் தேதி கந்த சஷ்டி ஐந்தாம் நாள் வரை இதே நிகழ்ச்சிகளும், நவ. 3-ம் தேதி மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் முக்கிய நிகழ்ச்சியான கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவும் நடைபெறவுள்ளது.



Leave a Comment