திருப்பதியில் 27-ந்தேதி ஆர்ஜித சேவைகள் ரத்து


திருப்பதியில் வரும் 27-ந் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளது. திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தசி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி வருகின்ற 27-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்று காலை உற்சவமூர்த்திகள் சர்வ பூபால வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து கண்டா மண்டபத்தில் கருடன் சந்நிதி எதிரில் உற்சவமூர்த்திகளை எழுந்தருளச் செய்து அர்ச்சகர்கள் ஆஸ்தானத்தை நடத்த உள்ளனர்.

 
அதனால் அன்று நடைபெறும் ஆர்ஜித சேவைகளான ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதையின் இறுதி வளைவில் நேற்று மதியம் திடீர் மண்சரிவு ஏற்பட்டது.

இதில் மண், பாறைகள், மரங்கள் உள்ளிட்டவை சரிந்து சாலையில் விழுந்தன. மண்சரிவு ஒரே பகுதியில் விட்டு விட்டுத் தொடர்ந்ததால் அப்பகுதி வழியாகச் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேவஸ்தான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண்சரிவுகளை அகற்றி சாலையை சீர் செய்தனர்.

அதன்பின் வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் மலைப்பாதையில் சுமார் 2½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்பு வேலியை அமைக்க அதிகாரிகளுக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
 



Leave a Comment