திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு..... 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கிறது. இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரமாகும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது  சனிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக உள்ளது. ஏற்கனவே பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் இன்றும் , நாளையும் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய திவ்யதரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலம் பழகக்கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

இதனால் இலவச தரிசனத்தில் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனத்தில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதை அடுத்து லேபாக்சி சந்திப்பு வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது .ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர். 

நேற்று வெள்ளிக்கிழமை காலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை 78,012 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 42 ஆயிரத்து 270 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் 2.86 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் திருமலையில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறை அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் அறைகள் கிடைக்காத பக்தர்கள் ஆங்காங்கே உள்ள மர நிழலிலும், மண்டபங்களில் தங்கி வருகின்றனர்.
 



Leave a Comment