ஞானக்குழந்தை


- 'மாரி மைந்தன்' சிவராமன்

மருதூர் என்றொரு சிற்றூர்.
அவ்வூரில் ஒரு கணக்குப்பிள்ளை.பெயர் இராமையா பிள்ளை.
மனைவி சின்னம்மை. சின்னகாவனம் சொந்த ஊர்.
இராமையா பிள்ளைக்கு சின்னம்மை ஆறாவது மனைவி.
முன்னவர் ஐந்துபேரும் மக்கட் பேறின்றி ஏதேதோ நோய்களால் மரணித்துப் போயினர்.
சிவபக்தையான சின்னம்மை ஆறாவதாய் மனைநிறைத்தார்.

ஒருநாள் சிவ அம்சத்தோடு சிவனடியார் ஒருவர் வாசலில் நிற்க ஓடிப்போய் தாழ் பணிந்தார் சின்னம்மை.
உள் அழைத்து உள்ளன்போடு உபசரித்தார்.
உபசரித்தலும் உணவிடுதலும் புண்ணியங்களில் உயர்ந்தவை.
புறப்படும் தருணம் சிவனடியார் "உனக்கோர் ஞான மகன் பிறப்பான். உன்னைப்போல் அவன் பிறருக்குப் பசி தீர்ப்பான். ஊருக்கு மட்டுமல்ல; உலகுக்கே பசி தீர்ப்பான்.
உலகம் போற்றும் இறையாய் ஒளிர்வான்" என்றபடி ஆசி தந்தார்.

விடைபெற்று  வீதி வந்தவர் வீடு விலகி தெருக்கோடி வரை நடந்து போய் மாயமாய் மறைந்து போனார்.
 அவர் வேறு யாருமல்ல..!
 எல்லாம்வல்ல ஆதிநாதன் சிவபெருமானே..!
கடவுளின் அருளால் கருத்தரித்த சின்னம்மை உரிய நாளில் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார்.
இல்லையில்லை....
கடவுளின் அருளால் கருக்கொண்ட குழந்தை உரிய நாளில் உலகில் அவதரித்தது.

ஐந்தாம் மாதம்.
குழந்தையை நடராஜ தரிசனத்திற்கு சிதம்பரம் எடுத்துச்சென்றனர் பெற்றோர்.
கோயில் அர்ச்சகர் அப்பைய தீட்சிதர் ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்.
அவர் கோயிலில் திரையைத் தூக்கினார்.
எல்லோரும் கைகளைச் சிரம் மேல் தூக்கி பக்தி பரவசத்தில் கன்னங்களில் ஒற்றிக் கொண்டிருந்தபோது... தாயின் தோளையும் முந்தானையையும் பற்றிக்கொண்டிருந்த பிள்ளை பொக்கை வாய் விரித்து அம்பலவாணரின் திக்கைப் பார்த்துச்சிரித்துக் கொண்டிருந்தது.

சிதம்பர ரகசியம் தரிசனம் ஆயிற்று ஞான குழந்தைக்கு.
அப்பைய தீட்சிதர் குழந்தையைக் கவனித்தார். ஓடோடி வந்தார்.
அவரது சிவ அனுபவம் பேசிற்று. 
"பிள்ளைவாள்.... இது ஏதோ சாதாரண குழந்தை அல்ல. இது தெய்வக் குழந்தை. ஞானக்குழந்தை.
 இறைவனுக்குத் தீபம் காட்டியபோது அங்கிருந்தபடி குழந்தையைப் பார்த்தேன்.
அடாடா ....அப்படி ஒரு பேரொளி....!
குழந்தையின் முகத்தில் சாட்சாத் அம்பலவாணரையே தரிசனம் கண்டேன்.
குழந்தையைப் பத்திரமாய் வளர்ப்பது உங்கள் பொறுப்பு.
அம்மா... நீ பாக்கியசாலி. கவனம்.... கவனம்"

சின்னகாவன திருவாட்டியோடு மகிழ்வோடு புறப்பட்டார் இராமையா பிள்ளை மருதூருக்கு.
அவர்கள் கோயில் சுற்றி வந்தபோது கோயிலின் வாசலில் அப்பைய தீட்சிதர் காத்திருந்தார்.
"இன்று குழந்தையோடு எனது இல்லத்திற்கு தயவுகூர்ந்து வாருங்கள்.
எனது வீட்டில் உங்களுக்கு மதிய உணவு. உணவு விருந்தாய் காத்திருக்கிறது.
உலகுக்கே உணவளிக்கப் போகிறவனுக்கு அவன் சின்னஞ்சிறு வாயில் உணவு ஊட்டிய புண்ணியம் எங்கள் குலத்திற்கு கிடைக்கட்டும்".
இன்னும் ஏதேதோ சொன்னார். அவை இறையும் மறையும் அவருக்கு உணர்த்திய வார்த்தைகள்.

இறையருளால் அவதரித்த குழந்தை, இறை தரிசனம் கண்ட குழந்தை..தவழ்ந்தது.... நடந்தது.....வளர்ந்தது....
குழந்தையைப் பார்க்க வரும் உற்றாரும் உறவினரும் ஒன்றை உணர்ந்தனர்.
பார்த்துவிட்டுத் திரும்பிய மாத்திரத்தில் ஆகாத காரியங்கள் எல்லாம் ஆகத் தொடங்கின.
அவர்கள் அகமகிழ்ந்து குழந்தையை 'குழந்தை வடிவில் தோன்றிய குமரன்' என்று கொண்டாடினர்.

அந்த குழந்தை யார் என அறிய முடிகிறதா ?
உடுத்ததற்கு கோவணம். உண்பதற்கு காய்கறிகள். உறங்குவதற்கு சுடுகாடு.குடிப்பதற்கு ஆற்றுநீர்.
தலையில் சடைமுடி. முகத்தில் நீண்ட தாடி. கழுவாத உடல். கந்தல் உடை. 
தங்குதல் வெட்டவெளி. தவமிருத்தல் இருண்ட குகை. சிந்தை எல்லாம் சிவமயம். சித்தி ஒன்றே மன விருப்பம்.

இடையிடையே உலகம் உய்ய மறைபொருளாய் ஞானப்பாக்கள். பரிபாஷையில் சித்த மருத்துவம்.அள்ளித்தரும் அருளாற்றல்.
இவையாவும் சித்தர்களின் இலக்கணமாய் மக்கள் மனதில் இருக்கும் பதிவு.
அப்பதிவில் பெரிய மாற்றம் தந்தது பின்னாளில் அந்த ஞானக் குழந்தை.

கருணை முகம். கனிந்த கரங்கள். பணிந்த பாதங்கள். இவை தவிர ஏதும் தெரியா வண்ணம் தூய வெண்ணிற ஆடை. உடுத்துவதில் மட்டுமின்றி உண்ணுவதிலும் உறங்குவதிலும் உடலைப் பேணுவதிலும் இறையருள் பெறுவதிலும் இலக்கணம் வகுத்து இலக்கணமாய் வாழ்ந்து நிறைஞானியாய் மிளிர்ந்தது அக்குழந்தை.

அந்த ஞானக் குழந்தையே ஜோதி கண்ட பெருஞ்ஜோதி கண்ட, அருட்பெருஞ்ஜோதி கண்ட  வள்ளல் பிரான்.

அவரது திருநாமம் இராமலிங்கம். பெற்றோர் வைத்த பெயர் இராமலிங்கம். உற்றார் ஊரார் அழைத்த பெயர் ராமலிங்கன். ஆன்றோர் சான்றோர் போற்றிய பெயர் இராமலிங்க அடிகள். கையொப்பத்தில் ஒளிர்ந்த பெயர் சிதம்பரம் இராமலிங்கம். ஆன்மீகம் வணங்கிய பெயர் இராமலிங்க வள்ளலார். சன்மார்க்கம் முதலாய் உலகே துதிக்கும் பெயர்திரு அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார்.


வள்ளலார் அவதரித்த நாள் அக்டோபர் 5...வருடம் 1823.
 



Leave a Comment