வெண்பட்டு குடைகள் திருப்பதி கோயிலில் ஒப்படைப்பு.... 


சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 11 வெண்பட்டு குடைகள் திருப்பதி கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பதி கோவில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம் இந்து தர்மார்த்த சமீதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்கினார்.

சென்னையில் கடந்த 28-ந் தேதி தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று மாலை திருப்பதி திருமலையை வந்தடைந்தது.  வெண் பட்டு குடைகளுடன் பட்டுவஸ்திரங்கள், பழங்கள், மஞ்சள் உள்ளிட்ட மங்களப்பொருட்களும் மேளதாளத்துடன் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு  ஏழுமலையான் கோயில் முன்பு  இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஏழுமலையான் கோயில்  கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம்  சமர்ப்பித்தார். 

அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுசலர் ஹரிந்திரநாத், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  முன்னதாக, நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 2 வெண்பட்டுக்குடைகள் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து பல ஆண்டுகளாக  வழங்கப்பட்டு வரும் மங்களப்பொருட்களில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் மாலைகளும், சென்னையில் இருந்து இந்து தர்மார்த்த சமிதி சார்பில் வழங்கப்படும் வெண்பட்டுக்குடைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

எனவே இந்து தர்மார்த்த சமிதி சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வெண்பட்டு குடைகள் கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சமர்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 28 -ந் தேதி சென்னையில் இருந்து இந்த திருக்குடைகள் ஊர்வலம் புறப்பட்டதில் இருந்து திருமலை வரும் வரை சுமார் 20 லட்சம் பக்தர்கள் இந்தக் திருக்குடைகளை பெருமாளின் அம்சமாகவே கருதி பயபக்தியுடன் வழிபட்டனர். இந்த குடைகளுடன் தமிழக மக்களின் பிரார்த்தனைகளையும் சமர்ப்பித்ததாக எண்ணி பெருமை கொள்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Leave a Comment