முன்னோர்களுக்கு சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் மணிகர்ணிகா குளம்
மாத அமாவாசைகள் மற்றும் விசேஷமான மஹாளய அமாவாசையில் புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகிறது.இதில் காசியில் உள்ள ‘மணிகர்ணிகா காட்' என்னும் இடத்திலுள்ள மணிகர்ணிகா குளம் இவையெல்லாவற்றையும்விட சிறந்ததாகப் போற்றப்படுகிறது. இந்தக் குளத்தினையொட்டிய கங்கை நதிக்கரையில் அமாவாசை தினத்தில் மட்டுமின்றி ,
எல்லா நாட்களிலும் மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மணிகர்ணிகா குளம் பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்களுக்கு சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் புனிதக் குளமாகும்.நடுப்பகல் வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து அதன் துதியையும் அவதார திருக்கதையையும் மகாளய பட்ச தினமாகிய 15 புண்ணிய தினங்களில் கூறுவோர் பெறும் புண்ணியத்தை தேவர்களாலும் கூறிட முடியாது.
மகாவிஷ்ணு தன் தங்கை உமையவளை பரமசிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து தேவர்கள், மகரிஷிகள், தேவகணங்களால் இடையூறுகள் இல்லாத பூலோகம் வந்த போது, அவர்கள் மூவருக்கும் ஒளி பொருந்திய ஓர் இடம் தென் படவே அங்கு தன் சக்ராயுதத்தால் அழகான தீர்த்தத்தை உருவாக்கினார். தன் தங்கையும், கணவன் பரமசிவனும் அதைக்கண்டு நீராட விரும்பி அழைத்து சென்ற போது தேவி அதில் எட்டிப்பார்த்து விட முகம் பொலிவாகத்தெரிந்தது. தன் நகைகளை சரி செய்த போது அவள் அணிந்திருந்த மணி குளத்தில் விழுந்தது. அதை பரமன் எடுக்க முயன்ற போது காதணிகள் நீரில் விழுந்தன.
அம்பிகையின் மணியும், பரமணின் கர்ண குண்டலமும் விழுந்ததால் மணிகர்ணிகா என்ற பெயர் பெற்றது. இந்த விஷேச மணிகர்ணிகா தீர்த்தங்கள் காசி மட்டுமல்ல வேதாரண்யம், திருபுவனம், திருநீர் மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்ப்பணம் செய்வதற்கு என்று சில தலங்கள் புகழ்பெற்றவை. அங்கு சென்றும் நாம் நம் முன்னோர்களுக்கு நம் பித்ரு கடமைகளை செய்யல்லாம்.
நாகை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள மூக்தீஸ்வரக் கோயில்.தில தர்ப்பணபுரி என்று அழைக்கப்படுகிறது. சந்திர தீர்த்தமும் அரசலாறும் ஓடுகிற இந்த தலத்தில் மஹாளய பட்ச தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்ரை, திருப்புல்லானி, தேவிபட்டினம், நவபாஷானை கடற்கரை தலம், கும்பகோணம் மகா மகக்குளம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, மூன்று நதிகள் சங்கமிக்கிற பவானி கூடுதுறை, திருச்சி அருகில் உள்ள முக்கொம்பு, மயிலாடுதுறை, காவிரிக்ரை மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருராமேஸ்வரம் ஆகிய தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம்.
அவ்வாறு புனித தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்,வீட்டில் உயிர் நீத்த பெரியவர்களின் படத்தை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து பொட்டு வைக்க வேண்டும். முன்னோர் பெயரைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டு வரவேண்டும்.
பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் அமாவாசை மற்றும் தர்ப்பண தினங்களில் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம். இது போல் நாம் செய்யும் பித்ரு தர்ப்பண பூஜையின் போது மனிதர்களுக்கு செய்யப்படும் உணவு தானத்தைப் போன்று, காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு, இறைகின்ற அரிசி எள் என மற்ற உயிர்களுக்கும் தானம் இடும் புண்ணியத்தைப் பெறுகிறோம். தர்ப்பண காலங்களில் பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கலாம்.
இப்படி நம்மால் எந்த வகையில் செய்ய முடியுமோ ,அந்த வகையில் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தாம் தவறாமல் செய்ய வேண்டும். இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் மட்டும் போதாது, நம் முன்னோர்களின் அருளும் ஆசியும் வேண்டும். அந்த ஆசியை நாம் அனைவரும் பெறுவோம்.
Leave a Comment