மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்.....


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 29 ஆம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்குவதை அடுத்து கொலு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

திருவிழா நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

திருவிழாவையொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலுச்சாவடிக்காக தனித்தனியாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மொத்தம் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் சுந்தரேசுவரரின் திருவிளையாடலை விளக்கும் கொலு பொம்மைகள் மற்றும் சிவன் மற்றும் சக்தியின் அம்சங்கள் குறித்த பொம்மைகள் வைக்கப்பட உள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவர் மீனாட்சி அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். 



Leave a Comment