திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்..... 


திருப்பதி கோவிலில் இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படுகின்ற தூய்மைப்பணி நடந்தது. அதையொட்டி காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை 6 மணிநேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுத்தம் செய்யும் பணி ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகிறது. அதன்படி யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம். 

அதன்படி இன்று அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை சேவை, கொலு ஆகிய பூஜைகள் முடிந்ததும், கோவிலின் பிரதான நுழைவு வாயில் சாத்தப்பட்டது. மூலவர் ஏழுமலையானின் விக்ரகத்தில் மாசு படியாமல் இருப்பதற்காக பட்டு துணியால் மூடப்பட்டு, காலை 6 மணிக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் தொடங்கியது. அப்போது கோவில் கருவறை, துவார பாலகர், ஆனந்த நிலையம், வரதராஜசாமி சன்னதி, லட்சுமி நரசிம்மசுவாமி சன்னதி, விஸ்வசேனர் சன்னதி, பாஷிங்கார்ல சன்னதி, தங்க கொடி மரம், பலி பீடம், வெள்ளி கதவுகள், சம்பங்கி மண்டபம், மகா துவாரம், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் என அனைத்து இடங்களும் பச்சை கற்புரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான சுகந்த மூலிகைப் பொருட்களை கொண்டு தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத், தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்ஷித்தலு தேவஸ்தான  ஊழியர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். நண்பகல் 11 மணியளவில் தூய்மைப்பணி முடிந்ததும், ஏழுமலையான் மீது போர்த்தப்பட்ட பட்டு துணியை அகற்றி விட்டு, மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. 

நண்பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி கோவிலில் 6 மணிநேர தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் வாரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டது.



Leave a Comment