புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் மகிமைகள்....
புரட்டாசி மாதத்துக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால், ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. எனவே விஷ்ணுவின் அருள் பெற உதவும் மாதமாக புரட்டாசி திகழ்கிறது. சனி பகவான் அவதரித்ததும் இந்த புரட்டாசி மாதத்தில் தான். எனவே இந்த புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபட்டால், சனி பகவானின் உக்கிரம் தணிந்து, பெருமாளின் கடாட்சம் பெருகுகிறது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்விய தேசங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பெருமாளின் முக்கியத் தலங்களில், பிரம்மோற்சவம் நடைபெறும். சிலர் தங்கள் குலதெய்வ வழிபாடுகளையும், புரட்டாசியில் செய்வர்.
வீடுகளில் விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து நீராடி, பூஜை அறையில், வெங்கடாசலபதி உருவப்படம் வைத்து, விளக்கை ஏற்றி, வழிபட வேண்டும், துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால், பழம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வணங்க வேண்டும். “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். இதே போல் மாலையிலும் வழிபட வேண்டும். இதுவே புரட்டாசி விரதம் எனப்படும்.
Leave a Comment