காதல் - காமம் - கண்ணன்
- 'மாரி மைந்தன்' சிவராமன்
பாரதப் போர்
முடிவுற்றிருந்த
நேரம்.
போர் முடிந்திருந்ததே
தவிர
போர்க்குணம் முடிந்தபாடில்லை.
பலருக்கும் மீதமிருந்தது.
பிணக்குவியல்
ஒருபுறம்... .
குற்றுயிரும்
குலையுயிருமாய்
துடித்துக் கொண்டிருந்தோர்
பிணக்குவியலின்
நடுப்புறம்.
பீமனின்
கதையினால்
கதை முடியும்
தருணத்திலிருந்தான் துரியோதனன்.
பிணக்குவியலின் ஊடே பிணக்கு குறையாதிருந்த துரியோதனனைக் கண்டான்
துரோணாச்சாரியாரின்
மகன் அசுவத்தாமன்.
அரசாண்ட மன்னன் இப்போது -
அனாதையாக..... மரணத்தின் விளிம்பில்.
துரியோதனின்
ஆருயிர் தோழன் அசுவத்தாமன்
துடிதுடித்துப் போனான்.
மீதமிருந்த
போர்க்குணம்
கொலை வெறியாகக் கருக்கொண்டது.
அது
ஒரு கருவைக் கூட விட்டுவைக்காத
தீக்குணம்
கொண்டிருந்தது.
" உயிர் நண்பனே ...
உன்னை
அழித்தவர்களை
இன்று இரவுக்குள்
அழித்து
அவர்களின்
தலைகளை உன் காலடியில் சமர்ப்பிப்பேன்."
சபதமிட்டான்.
மனம் குமுறி
ஓலமிட்டான்.
அவன் குரல் போர்க்களத்தில்
பிணமாய் கிடந்த யாருக்கும் கேட்கவில்லை.
ஆனால்
அது
போர் சூத்திரதாரியான கண்ணனுக்கு கேட்டது.
விபரீதம் உணர்ந்த
கண்ணன்
உடனே விரைந்து பாசறையில் இருந்த பாண்டவர்களை
வேறிடம் செல்ல பணித்தான்.
அவர்கள்
அவசர அவசரமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.
கட்டுக்கடங்கா கொலை வெறியுடன் வந்த அசுவத்தாமனின் கண்களில்
புறப்பட்டுக் கொண்டிருந்த பாஞ்சாலியின் புதல்வர்கள் நிழலாடினர்.
அவர்களைப் பிடித்து தலைகளைக் கொய்தான். கொக்கரித்தான்.
"பாண்டவர் வம்சம் அழிந்தது .."
நல்லவேளை அபிமன்யுவின் மனைவி உத்தரை அவன்
கண்களில் படவில்லை.
தப்பித்தாள்.
எப்படியோ வாரிசு கிடைத்துவிடும் என கணப்பொழுதில் தகவலறிந்த
தர்மர்
பெருமூச்சுவிட்டார்.
காரணம்
அது சமயம் உத்தரை கருவுற்றிருந்தாள்.
வம்சத்தை அழிக்கவந்த அசுவத்தாமனின்
மூலையிலும்
பொறி தட்டியது.
அபிமன்யுவின் மனைவி உத்தரையை
அவன் கண்கள் தேடின.
கருவறுக்க வந்தவன்
நொடிப் பொழுது கூட
யோசிக்காமல்
பிரமசிரசு அம்பை
ஏவினான் .
பிரம்மாசுரத்திற்கு இணையான
வல்லமை கொண்டது
பிரம்ம சிரசு.
எல்லாம் அறிந்த மாயக்கண்ணன்
அம்பைத் தடுக்க ஆயத்தமானான்.
ஆபத்பாந்தவன்
முயற்சி
வெற்றி காணாமல் இருக்குமா ?
உத்தரை
உயிர்தப்பினாள்.
ஆனால்
அவள்
வயிற்றில் இருந்த
கரு
உருத்தெரியாமல் கருகியது.
காலம் நகர்ந்தது.
உத்தரை
மகவு பெற்றாள்.
குழந்தை
இறந்தே பிறந்தது.
அதுவும்
ஒரு கரிக்கட்டை.
பாண்டவர் கதறி
அழுதனர்.
மாயவன்
கனிந்து குனிந்து
மெல்லிய
புன்னகையோடு சொன்னான்.
" கவலைப்படாதீர்கள்.
கரிக்கட்டை
உயிர்பெறும்"
கரியான சிசு
உயிராகும்
அதிசயத்தைக் காண
கூட்டம்
சேரத் தொடங்கியது.
பராசரர்
வியாசர்
ஞானிகள்
முனிவர்கள்
என பெருங்கூட்டம்.
கண்ணபிரானின்
கருணை முகம் பார்த்திருந்தனர்
அத்தனை பேரும்.
கண்ணன் உரக்கச் சொன்னான்
" பிரம்மச்சரிய விரதத்தை நழுவாமல்
கடைப்பிடிக்கும்
ஒருவர் தொட்டால்
கரி உரு மாறும் .
பொன் நிறமாகும்.
நிறை குழந்தையாகும்."
"இவ்வளவுதானா
இதோ
நான் தொடுகிறேன்." வந்தனர்
அதுகாறும்
நாடு வியந்திருந்த
முனிவர் பெருமக்கள்.
ஒவ்வொருவராய் தொட்டும்
ஜனிக்கவில்லை பாண்டவரின் வாரிசு.
இத்தனை நாள் கொண்டிருந்த
இறுமாப்பு சரிந்து ஞானிகள்
தலைகுனிந்தனர்.
"சரி ....
ஒருவர்கூட இல்லையா....
நான் தொட்டுப் பார்க்கிறேன்."
அர்த்தப் புன்னகையோடு தொடப் போனான்
விஷமக்காரன்.
முனிவர்கள்
ஒருசேர
கண்ணனை
கோபமாய் பார்த்து
நமட்டுச் சிரிப்பை
உதிர்த்தனர்.
"கண்ணா.....
நாங்கள்
பல காலம்
காட்டில் தனித்து
தவமேற்கொண்டு பிரம்மச்சரியத்தின் எல்லையைக் கண்டவர்கள்..
எங்கள் உயிரே பிரமச்சரியம் தான்.
நாங்கள்
பந்தபாசம் ஏதும் இல்லாதவர்கள். பற்றற்றவர்கள்.
நாங்கள் தொட்டே
கரு உயிர்
பெறாத போது
நீ ......"
வெடித்தார்
ஒரு மூத்த முனிவர்.
" நீ எட்டு
பட்டத்தரசிகளுடன்
காதலில் திளைக்கும் காதல் மன்னன்.
பதினாறாயிரம்
ஆயர்குலப் பெண்டிருடன்
ராஜகிரீடை புரிந்தத
காமராஜன்.
உனக்கு ஒழுக்கம்
என்ற வரலாறு
இதுவரை இல்லை....
நீ ....பிரம்மச்சாரியா..."
தாடி நீவி
மீசை மீறிய
பற்கள் பளிச்சிட
ஏகடியம் செய்தார்.
கோகுலக்கண்ணன் வேடிக்கையாய்
அவரைப்
பார்த்தவண்ணம்
" கரிக்கட்டையை
நான் தொட்டால்
யாருக்கும்
நட்டம் இல்லை."
என்றவாறு
தொட்டான்.....
மெலிதாய் நீவினான்...
மாயாஜாலம் போல் கரிக்கட்டை
உயிர் பெற்று
பிறந்த குழந்தையாய்
பூத்தது.
கூட்டம் ஆரவாரித்தது.
தவமுனிவர்களும்
முக்காலம் உணர்ந்த ஞானிகளும்
தொங்கிய தலையினராய் கண்ணனின் பாதம் நோக்கினர்.
"முனிவர்களே !
நீங்கள் தவ
ஆற்றல் மிக்கவர்தாம்.
பிரம்மச்சரியத்தின்
பிம்பமே நீங்கள்தான்.
ஆனால்....."
கண்ணணின்
காந்தக் கண்கள்
முழுதாக முனிவர்கள் அனைவரையும்
ஒருமுறை மேய்ந்து
விரிந்தது .
பின் சொன்னான்,
"உங்கள்
உள்மனதில் காமம் இருந்தது.
சிலசமயங்களில்
காமத்தால் துடித்தீர்கள்.
புத்தி பேதலித்திருந்தது.
உள்ளம் பொய்திருந்தது.
நான்
பல்லாயிரம்
பாவையரோடு சல்லாபித்திருந்தது
நிஜமே.
உலகோர்
நினைப்பதும் அதுவே.
ஆனால்
ஒரு தடவை கூட
என் மனது
காமமானதில்லை.
கசடானதில்லை..
அது
மோன நிலையிலும்
ஞான நிலையிலேயுமே இருந்தது.
ஒருபோதும்
மோக நிலையில்
இருந்ததில்லை.
உங்களுக்குத் தெரியாததல்ல.....
யாருக்கும் எவருக்கும்
ஏன்
முற்றும் துறந்த
முனிவருக்கும் கூட
காமம் தவிர்ப்பது
எளிதல்ல."
ஞானப்பால் அருந்திய
ஞானியர் வாழ்த்துரைக்க பார்த்தன் எதிர்பார்த்த
பரவசம்
பாண்டவர் பூமியில்
படர்ந்தது .
விண்ணதிர
கரவொலியும்
கிருஷ்ண நாமமும்
ஒலித்தன.
அதையும் மீறி
மழலையின்
அழுகுரல்
உத்தரையை
அழைத்தது.
ஓடி வந்து
குழந்தையை
மார்புறத்
தழுவினாள்.
கண்ணனை வணங்கியபடியே குழந்தைக்கு
அமுதூட்டத்
தயாரானாள்
தாயான உத்தரை.
Leave a Comment