தங்க கருட வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மலையப்ப சுவாமி. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியையொட்டி இன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதி உலாவின் பொழுது நான்கு மாட வீதியின் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மனம் உருகி கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் வழிபட்டனர். 

வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் முப்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 8ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி உடன் நிறைவு பெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையாக  ஐந்தாவது நாள் நான்காம் தேதி இரவு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 

இதனை காண்பதற்காக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் பிரம்மோற்சவத்தின் கருட சேவையாக இன்று நடைபெற்ற பௌர்ணமி கருட சேவை நடத்தப்பட்டது. இதையொட்டி நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவத்தின் போது நடைபெறக்கூடிய கருட சேவையில் எவ்வாறு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்களோ அதுபோன்று இன்று நடைபெற்ற கருட சேவையின் போது பக்தர்கள் நான்கு மாடவீதியில் அனுமதிக்கப்பட்டனர். 

போலீசார் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்தும் எந்தெந்த இடங்களில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்வது குறித்து அதிகாரிகள் மாதிரி கருட சேவையாக இன்று நடத்தினர். இதில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி,  எஸ்பி அன்புராஜன், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி, கூடுதல் முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் சிவகுமார் ரெட்டி, உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.



Leave a Comment