விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு 18 லட்ச ரூபாய்க்கு ஏலம்... வீடியோ காட்சி
ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்கு சமர்ப்பிக்கப்பட்டு படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டுவை ராம் ரெட்டி என்பவர் 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது மிகவும் புகழ் பெற்ற திருவிழாவாகும். விநாயகர் சதுர்த்தி முதல் அடுத்த 11 நாட்கள் வரை ஒவ்வொரு மூலையிலும் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை தரிசனம் செய்யலாம். இதில் குறிப்பிடத்தக்க தகவல் ஐதராபாத்தில் தேசிய அளவில் மிகவும் உயரமான விநாயகர் சிலை ஒவ்வொரு ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கபடுவதே வழக்கம்.
கடந்த 1954 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரையா கைரதாபாத்தில் ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலையை நிறுவி முதன்முதலில் அந்தப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை துவக்கி வைத்தார். அப்போது முதல் கைரதாபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டை விட உயரமான சிலையை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தில் விநாயகர் சதுர்த்தி உற்சவ குழுவினர் உயரமான சிலையை நிறுவி பூஜித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 60 அடி உயர விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கைரதாபாத்தில் நிறுவப்பட்டது.
இந்த ஆண்டு அதை விட உயரமான சிலையை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில் 61 அடி உயரத்துடன் 12 தலைகள், 24 கைகளுடன் கூடிய மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலை கைரதாபாத்தில் நிறுவப்பட்டது.விநாயகர் சதுர்த்தி துவங்கி கடந்த 10 நாட்களாக கைரதாபாத்தில் கணபதி என்று பெயர் பெற்ற விநாயகருக்கு பொதுமக்கள் நடத்தி வழிபாடு செய்து வந்தனர்.
இந்நிலையில் செகந்திராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரியில் கரைப்பதற்காக கைரதாபாத் கணபதியை விநாயகர் சதுர்த்தி உற்சவ குழுவினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். 50 எடையுள்ள கைரதாபாத் கணபதியை போலீசார் 4 ராட்சச கிரேன்கள் மூலம் லாரியில் ஏற்றி ஐதராபாத் முக்கிய நகரின் வழியாக சுமார் 7 மணி நேர ஊர்வலத்திற்கு பிறகு நெக்லஸ் ரோட்டில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உசேன் சாக்ர் ஏரியில் கரைக்கப்பட்டது.
இந்த நிலையில் மற்றொரு நிகழ்வாக ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகருக்கு 26 ஆண்டுகளாக லட்டு படைக்கப்பட்டு விநாயகர் விநாயகர் விஜர்சனம் அண்று விநாயகருக்கு படைக்கபட்ட லட்டு ஏலம் விடப்படுவது வழக்கம்.முதல் முறை நடைபெற்ற ஏல்த்தில் ரூ 450 க்கு விற்கப்பட்டு லட்டு இந்த ஆண்டு ராம் ரெட்டி என்பவர் ஏலத்தில் 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு பாலப்பூர் கணபதி லட்டு 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் ஸ்ரீனிவாஸ் குப்தா என்பவர் எலத்தில் பெற்றார்.
Leave a Comment