மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதம்.... பக்தர்கள் வரவேற்பு.... 


மதுரை மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வரும் தீபாவளி முதல் தினந்தோறும் லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில்.  ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு,  உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

அவ்வாறு மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும், தலா ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் தீபாவளி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி இருப்பதாகவும், இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும், என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  அண்மையில் தூய்மைக்கான இந்திய அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment