திருவோணம் வரலாறு.....


 முன்னொரு காலத்தில், சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னனாக பிறந்து, சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தது.

மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். 

திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். 

பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.



Leave a Comment