திருவோணம் பண்டிகை கொண்டாட்டம்...
கேரளாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் இவ்வோணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்களும் நடைபெறுகிறது. கேரளாவில் கொண்டாடப் பெறும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் வாயிற் படியிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்களைப் பெண்கள் வரைகின்றனர். கோலத்தின் நடுவில் குத்துவிளக்கேற்றி வைத்து, அதனைச் சுற்றிப் பல வகையான காய், கனிகளையும் அழகுற அடுக்கி வைக்கின்றனர்.
இக்கோலத்தை "அத்தப்பூக் கோலம்" என்று அழைக்கின்றனர். அன்று மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பலவிதமான காய், கனிகளையும் உணவு வகைகளையும் விருந்தினர்களுக்கு வழங்கித் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். திருமால் உறையும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
விருந்துக்கு பிறகு ஆண்களும், பெண்களும் இணைந்து பல்வேறு நடனங்களை ஆடி மகிழ்வார்கள். ஓணப்பட்டுடுத்திய பெண்கள் அத்தப்பூ கோலத்தில் மீது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனை சுற்றி நடனமாடுவார்கள். மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆண்கள் புலிக்களி நடனம், களரி, கயிறு இழுத்தல், கடுவா ஆட்டம், எறி பந்து, கிளியாந்தட்டு, ஓண ஊஞ்சல் என நடக்கும் விளையாட்டுகள் மனதிற்கும், உடலுக்கும் உரம் சேர்க்கும் வகையில் இருக்கும்.
Leave a Comment