திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவம்....
காரைக்காலம்மையார் கோயில் குளக்கரையில் நடைபெற்ற திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஸ்ரீ பகவான் பக்த ஜன சபா மற்றும் நாட்டியாலயா அகாடமி இணைந்து ஆண்டுதோறும் திருமலா திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தை காரைக்காலில் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஸ்ரீதேவி ,பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் உற்சவம் சந்திர புஷ்கரணி என்றழைக்கப்படும் காரைக்காலம்மையார் கோயில் குளக்கரையில் இன்று மாலை நடைபெற்றது .
முன்னதாக சுப்ரபாத சேவை உடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து திருமஞ்சன சேவை தோமாலை சேவை உள்ளிட்டவை நடைபெற்றன. மாலை 5 மணிக்கு நாதஸ்வர கச்சேரி மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் ,வேத பாராயணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஸ்ரீ வெங்கடேச பெருமாளின் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காரைக்கால் மட்டுமின்றி திருநள்ளாறு, கோட்டுச்சேரி ,அம்பகரத்தூர், திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரையை சுற்றிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர் . பரதநாட்டிய மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு திருப்பதியிலிருந்து வரவழைக்கப்பட்ட லட்டுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Leave a Comment