திருவோண பூஜைக்காக செப்-9 சபரிமலை நடை திறப்பு
திருவோண பூஜை வழிபாட்டிற்காக சபரிமலை கோயில் சேப்டம்பர் 9 ஆம் தேதி நடை திறக்கப்பட இருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசிநாள் திறக்கப்படும். அன்று மாலை 5மணிக்கு திறக்கப்பட்டு ஐயப்பன் மீது உள்ள விபூதிக் காப்பு எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் காலை 5 மணியில் இருந்து கணபதி ஹோமம், சந்தன அபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும்.
5 நாட்கள் பூஜை நடைபெற்ற பின்னர் இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் எனும் தாலாட்டுப்பாடலுடன் நடை சாத்தப்படும். இதேபோல பங்குனிஉத்திரம், சித்திரை விஷூ, பிரதிஷ்டை தினவிழா, திருஓணம் பண்டிகை உள்ளிட்ட நாட்களிலும் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும்.
ஓணம் பண்டிகை வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவோணபூஜை வழிபாட்டிற்காக வரும் 9-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 13-ம் தேதி வரை சபரிமலையில் பல்வேறு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும்.
ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13 அன்று நடை சாத்தப்பட்டு புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் 16-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.
Leave a Comment