கேட்கும் வரம் தரும் பொய்யாமொழி விநாயகர்
குள்ள குள்ளனே.. குண்டு வயித்தனே..
வெள்ளிக்கொம்பனே.. விநாயக நமஸ்தே.
எதுவானாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கும் நாம், முழு முதல் கடவுளாக வழிபடுவது அந்த பிள்ளையாரைத்தானே.
கொஞ்சமாய் மஞ்சளை பிடித்துவைத்தாலே அங்கு வந்துவிடும் பிள்ளையார், ஆலமரத்தடியிலும் அரச மரத்தடியிலுமாக அமர்ந்து கொண்டு கேட்டவர்க்கு கேட்ட வரம் தருகிறார்.
அப்படிப்பட்டவர் விழுதே விடாத ஆலமரத்தின் அடியில் இருந்து கொண்டு அருள் பாலிக்கும் இடம் எது என்று தெரியுமா?
பொய்யாமொழி விநாயகராக தீவனூர் என்ற இடத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
திண்டிவனம் – செஞ்சி சாலையில் தீவனூர் என்ற சிறிய கிராமத்தில் பெரிய குளத்தருகே சுயம்புவாக இருக்கிறார்.
கோயிலுக்கு செல்லும் பாதையில் முதலில் ஆதிவிநாயகர் கோயில் சிறியதாக காட்சியளிக்கும். பொய்யாமொழி பிள்ளையாரை பார்ப்பதற்கு முன் ஆதி விநாயகரை பார்த்து ஒரு கற்பூரம் ஏற்றிவிட்டு செல்வார்கள்.
பின்னர் குளக்கரையை கடந்து சென்றால், தீவனூர் பொய்யாமொழி பிள்ளையார் கோயிலுக்குள் நுழையலாம்.
சுயம்பு வடிவில் லிங்கமாக காட்சியளிக்கும் பிள்ளையார், கணபதி லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறார். அபிஷேக ஆராதனைகளின்போது அவரின் பிள்ளையார் ரூபத்தில் துதிக்கையுடன் வெளிப்படுவதை பார்க்க முடியும்.
முன்னொரு காலத்தில் இந்த கோயில் பூசாரி, வியாபாரி ஒருவரிடம் பூஜைக்கு மிளகு கேட்க, அந்த வியாபாரி கொடுக்க மனமில்லாமல் உளுந்துதான் இருப்பதாக கூறிவிட்டார். பின்னர் வியாபாரத்திற்கு போன இடத்தில் அவரது அத்தனை மிளகு மூட்டைகளும் உளுந்து மூட்டைகளாக மாறிப் போயிருந்தன. எனவே, சொன்ன மொழியை உண்மையாக்கிய இவர் பொய்யாமொழி விநாயகராக அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலில் கொடி மரத்திற்கு வலப்புறம் நவகிரகங்கள் அமைந்துள்ளன. கொடிமரத்தை கடந்து சென்ற உடனேயே பொய்யாமொழி பிள்ளையாரை பார்க்கலாம். அண்மைக் காலத்தில்தான் கோயில் புனரமைக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் வழக்கம்போல குளக்கரை பிள்ளையாராகத்தான் இருப்பார்.
குளக்கரையை ஒட்டி காணப்படும் ஆலமரங்கள் விழுதுவிட்டு காட்சியளிக்கும் நிலையில், கோயிலுக்கு பின்புறம் 3 ஆலமரங்கள் உள்ளன. மூன்றும் சிவன், பிரம்மா, விஷ்ணுவாக கருதப்படுகின்ற தெய்வ மரங்கள். இந்த மூன்று ஆலமரங்களும் விழுதில்லா மரங்கள் என்பதுதான் இவற்றின் தனிச்சிறப்பு.
பிள்ளையாரை வணங்குபவர்கள், இம்மரங்களையும் சேர்த்தே வணங்குகிறார்கள். அந்த இடத்தில் பொங்கல் வைக்கவும், காதுகுத்து போன்ற எளிய குடும்ப விழாக்களுக்குமாக இடம் இருக்கிறது. எப்போது அங்கு சென்றாலும் யாராவது பொங்கல் வைப்பதும் புதுமணத் தம்பதியர் வந்து ஆசி பெற்றுச் செல்வதுமாக இருப்பார்கள்.
திருமண தோஷம் நீக்கும் தலமாகவும், குழந்தைப்பேறு அளிக்கும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.
பல ஜமீன்தார் பரம்பரையினரும், அவர்களை சார்ந்தவர்களும் குலதெய்வமாக வழிபட்ட வரலாறு கொண்டவர் பொய்யாமொழி விநாயகர். அந்த காலத்தில் பல குடும்பங்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து இக்கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவர். ஆண்டுக்கு ஒருமுறையாவது இக்கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவது இன்றும் பல குடும்பங்களின் வழக்கமாக உள்ளது.
இவரிடம் கேட்ட வரத்தை பொய்க்காமல் நிறைவேற்றித் தருபவர் என்பதாலும் பொய்யாமொழி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இதனால் பொய்யாத வரம் தரும் பிள்ளையாரை ஒருமுறை தரிசித்துவிட்டு வரலாமே..
பாலும் தெளிதேனும், பாகும்
பருப்பும் இவை நான்கும் கலந்த
நான் உனக்குத்தருவேன்
கோலம் செய்
துங்கக் கலிமுகத்துத் தூயவனே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!
-பாமா, எழுத்தாளர்
Leave a Comment