நாடு முழுவதும் உள்ள கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மணக்குள விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையுடன் படையல் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோவில் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. மேலே அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும், கீழே அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4-வது நாள் வரும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. தொடர்ந்து விழா வருகிற 15-ந்தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது.
முதல் நாளில் 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்கு விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சக்தி தலங்களில் முதன்மையாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ளது ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விநாயகருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு 14 வது ஆண்டாக சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 10, 20, 50, 100, 500, 2000 உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் டிஜிட்டல் விநாயகர் வடிவமைக்கப்பட்டது. யானைமுகம் தோன்றிய புராண நிகழ்வுகளை உணர்த்தும் தத்ரூப காட்சிகளை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18படி அரிசி,25 கிலோ வெல்லத்தில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
பெரம்பலூர் அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அமைல் து அருள்பாலித்து வருவது ஆழத்து பிள்ளையார். இந்த ஆலயத்தில் தனி சந்நிதியாக உள்ள பாதாள விநாயகருக்கு இன்று சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன..
திரு காலஸ்த்தி நகர், விருத்தாசலத்திற்கு அடுத்து பாதாளத்தில் விநாயகர் அமைந்திருப்பது இந்த வெங்கனூர் கிராமத்தில் மட்டுமே, இந்த விநாயகரை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை
Leave a Comment