சிவப்பு சாத்தி கோலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி....
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா 7 ஆம் திருநாளன்று சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணித்திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சிவப்பு சாத்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. இதனையடுத்து சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் சிகப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஆவணித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 29 ஆம் தேதி நடைபெறும்.
Leave a Comment