குழந்தை பாக்கியம் அருளும்...நவநீத கிருஷ்ணன்!
குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.
இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இக்கோவில் பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஆலயத்தின் தென்மேற்கில் தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் அரவிந்தவல்லித் தாயார் அருள்பாலிக் கிறார். ஆலயத்தின் வடமேற்கில் உள்ள விஷ்ணு தீர்த்தத்குளத்தில் சுயம்புவாய் தோன்றியவர் இத்தல தாயார் என்கிறார்கள். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் அரவிந்தவல்லித் தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.
அடுத்து பிரகார வலம் வருகையில் வடமேற்கில் கிழக்குப் பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணன் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து, திருப்பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் கருடபீடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் அருள்கிறார்.
சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோவில் மூடப்பட்டிருந்தது.
அதனால் அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா' என்னும் கீர்த்தனையைப் பாடினார். ஆச்சரியம்.. கோவில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத் திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் உள்ளாராம்.
நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது.
Leave a Comment