திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்.... வீடியோ காட்சி...
உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆவணித்திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
ஆவணித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 5.20 மணியளவில் திருக்கோயிலில் உள்ள செப்புக் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக. 26-ம் தேதியன்று ஏழாம் திருவிழா மாலை 4.30 மணிக்கு மூலவர்களில் ஒருவரான சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இதனை த்தொடர்ந்து ஆக. 27-ம் தேதி எட்டாம் திருவிழாவில் பகல் 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் வந்து சேர்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற ஆக. 29-ம் தேதி காலை நடைபெறும்.
Leave a Comment