திருப்பதியில் மலை போல் குவிந்துள்ள சில்லரை நாணயங்கள்.....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய நாணயங்களை வங்கியில் வழங்கி மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளாக மலை போல் குவிந்து இருந்த சில்லரை நாணயங்களுக்கு தீர்வு கொண்டு வந்துள்ளது தேவஸ்தான நிர்வாகம்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் ஏழுமலையான் கோவில் உண்டியலில் செலுத்திய சில்லறை நாணயங்கள் 20 கோடியே 50 லட்ச ரூபாய் வரை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள சில்லறை நாணய பரக்காமணியில் சேர்ந்து உள்ளது.
இந்த நாணயங்களை மாற்றுவதற்காக அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் தேவஸ்தானத்தில் உள்ள சில்லறை நாணயங்களை பெறக்கூடிய வங்கியில் மூன்றாண்டுகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் அதே தொகை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வருவது குறித்தும் வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கி அதிகாரிகளும் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள சில்லரை நாணயங்களை பெறுவதற்கு அவர்கள் முன்வந்துள்ளனர்.
மேலும் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியலில் காணிக்கையாக 5 கோடி ரூபாய் வரை சில்லறை நாணயங்கள் வருகிறது. அதனை சுழற்சிமுறையில் நீங்களே தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் வழங்கும்படி வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஒவ்வொரு மாதமும் உண்டியலில் கிடைக்கும் சில்லரை நாணயங்களை பெறுவதற்காக பட்டியலை வழங்கியுள்ளனர்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 5 கோடி ரூபாய் சில்லரை நாணயங்களை தேர்தெடுக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்யும் விதமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. எனவே இன்னும் ஒரு மாத காலகட்டத்திற்குள் தேவஸ்தானத்தில் நிலுவையில் உள்ள சில்லறை நாணயங்கள் அனைத்தும் அந்தந்த வங்கியில் செலுத்தப்பட்டு அதன் மூலமாக தேவஸ்தானத்திற்கு வட்டி கிடைக்கும் விதமாக செய்யப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
Leave a Comment