புஷ்பாங்கி சேவையில் அத்தி வரதர்.... தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து
காஞ்சிபுரம், ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் 46 ஆம் நாள், புஷ்பாங்கி சேவையில் காட்சியருளும் ஸ்ரீ அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.
நாளையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற 17-ந்தேதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும். கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரை எடுத்து செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இன்று ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படும். முக்கிய நபர்களுக்கான தரிசன வாயிலும் 12 மணிக்கு அடைக்கப்படும். உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும்.
Leave a Comment