திருமணத் தடை உள்ளவர்கள் வணங்க வேண்டிய சேண்பாக்கம் செல்வ விநாயகர் 


மகாகணபதி எழுந்தருளியிருக்கும் கோயில்களில் ஒன்று, சேண்பாக்கம்.  ஒரே கருவறையில் பதினோரு சுயம்பு லிங்கங்களாக விநாயகப்பெருமான் திருவருள்புரியும் இத்திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சேண்பாக்கத்தில் உள்ளது. பிரதான விநாயகராக செல்வ விநாயகர் அருள்கிறார். தலமரமாக வன்னிமரம் போற்றப்படுகிறது. இது மிகவும் தொன்மையான தலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது தேரில் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். 

ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கி பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்பளித்தது. பயந்து போனார் துக்காஜி. அப்போது விநாயகர் அசரீரியாக ‘இவ்விடத்தில் ஏகாதச வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வந்து ஆலயம் எழுப்பு,’ என்று ஆணையிட்டார். அதன்படி இவ்விடத்தில் லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து பிரதிஷ்டை செய்தார் துக்காஜி. மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.

ஆதிசங்கரருக்கு சுயம்பு மூர்த்தங்களை தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து அவர் இத்தலத்திற்கு வந்தார். 11 சுயம்பு மூர்த்திகளும் லிங்க வடிவிலேயே இருப்பதைக் கண்டார். பின் தன் ஞானதிருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு ஆதிசங்கரரின் இக்கோயிலை வழிபட்டிருக்கிறார் என்பதிலிருந்தே இந்தக் கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்கும்.  

இந்த யந்திரத்தின் அருகே நவகிரக மேடை அமைத்துள்ளனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவகிரகத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள்.  விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 



Leave a Comment