தொடர் விடுமுறை.... அத்திவரதரை தரிசிக்க கட்டுக்கடங்காத கூட்டம்


தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் காஞ்சி அத்திவரதரை தரிசிக்க வழக்கத்தை விட கூட்டம் அலை மோதுகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா தொடங்கி இன்றுடன் 41 நாட்கள் ஆகிறது.  ஜூலை 31 ஆம் தேதி வரை அத்திவரதர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதர் வைபவம் தொடங்கிய நாள் முதல் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேர் வரை அத்தி வரதரை தரித்து வருகின்றனர். 

அத்திவரதரை தரிசிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அத்திவரதரை தரிசிக்க 7 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. ஆனாலும் பக்தர்கள் காத்து இருந்து தரிசித்து வருகிறார்கள். 41-வது நாளான இன்று அத்திவரதர் வெள்ளை, ரோஜா நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 



Leave a Comment