மதுரை போகாமலேயே மீனாட்சி அம்மனை தரிசிக்க....
நாகை மாவட்டத்தில் திருவெண்காட்டீஸ்வரர் ஆலயத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள்.. இங்கே சென்னைக்கு அருகில் திருவெண்காடுறை ஈஸ்வரர் இருக்கிறார்? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மீனாட்சி அம்மனை மதுரை போகாமலேயே தரிசிக்கலாம். எங்கே என்று தெரியுமா? பாதாள சுரங்கம் உள்ள கோயில் எங்குள்ளது என்று தெரியுமா? இந்த கேள்விகளுக்கான பதில், சென்னைக்கு மிக அருகே உள்ள மதுராந்தகம் தான்.
அந்த காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது இந்த ஊர் அதாவது நான்கு வேதங்களும் சம காலத்தில் ஓதப்பட்ட இடம் மதுராந்தகம். இங்கு ரயிலடிக்கு அருகே அமைந்துள்ளது திருவெண்காட்டீஸ்வரர் ஆலயம். ஐந்து நிலைகளைக் கொண்ட இந்த ஆலயம், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
வெண்கொக்கு மந்தாரைகள் நிறைந்த காட்டில் இருந்ததால் வெண்காட்டீஸ்வரன் என்று இந்த ஈஸ்வரனுக்குப் பெயர் மதுராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதும், பராந்தக சோழன் ஆட்சிக்குட்பட்டும் பாண்டியன் ஆட்சிக்காலத்தில் பராமரிக்கப்பட்டதுமானது இக்கோயில்.
வெண்காட்டீஸ்வர், இங்கு மீனாட்சி சமேதராக காட்சி தருகிறார். இங்குள்ள அம்மன், 6 அடி உயரம் கொண்டது. திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி,மதுராந்தகம் மீனாட்சி அம்மன், அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் மட்டுமே 6 அடி உயரத்தில் காட்சிதருகிறார்கள்.
திருவெண்காட்டீஸ்வரர் உளி படாத திருமேனி கொண்டவர். தெற்கு பார்த்த வாக்கில் அம்மன்..இடதுபுறம் சூரியனின் அழகிய சிலை வடிவம். சிலையின் நகக்கண் கூட தெளிவாக தெரியும் வகையிலான அற்புத வடிவம் கொண்ட சூரியன், சூரியனார் கோயிலில் உள்ளதைப்போல உரு கொண்டவர்.
சன்னதியின் ஒரத்தில் யாரும் கவனிக்காத வகையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு, இங்கு பாதாள சுரங்கமோ அல்லது நகைகள் வைக்கக்கூடிய அறையோ கர்ப்பகிரகத்திற்கு கீழே இருப்பதாக காட்டுகிறது. ஆனால், இதுவரை யாரும் இதனை ஆராய்ந்தது இல்லை.
சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் சுந்தரர், அப்பர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் காட்சியளிக்கின்றனர். மேலும் நான்கு பைரவர்கள் உள்ள கோயில்களில் மதுராந்தகம் கோயிலும் ஒன்று.
தோஷங்கள் நிவர்த்திசெய்யும் திருக்கோயில் என்பதால், திருமண தோஷம் முதல், பல்வேறு தோஷ நிவர்த்திக்கு இங்கு பக்தர்கள் வருவது வழக்கம். கடைசியாக 80 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்ததாக செவி வழி செய்தி இருந்ததையடுத்து ஊர் மக்களாக கூடி கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர்.
பிரதோஷம் முதற்கொண்டு அனைத்து பூஜைகளும் விமரிசையாக நடக்கும் இந்த கோயிலில் வழிபட்டால், நாகை திருவெண்காட்டீஸ்வரரை தரிசித்தற்கான பலன்களை பெறலாம்.
அதனால்தான், மண்ணிலே சிறந்த ஊர்..மாலவன் நடந்த ஊர்..மறைகள் நான்கும் வலம் வந்த ஊர்..மனதிற்கு இனிய ஊர் மதுராந்தகம் என்கிறார்கள்.
ஓம் நமசிவாய!
- பாமா
Leave a Comment