18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்ட சதுரகிரி சுந்தரமகாலிங்கம் 


மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற 4 மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இந்த கோவில், அகத்தியர் முதலான 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்ட தலமாகும். இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500அடி உயரத்தில் அமைந்துள்ளது. 

சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம் செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாகபயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல சாப்டுர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர்  மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் , வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. 
மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர்  மலை  பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

சதுரகிரி மலையில் மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் என ஐந்து கோயில்கள் உள்ளன.  வருடந்தோறும் ஆடி அமாவாசை , தை அமாவாசை  மற்றும் சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு அதிகமான மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
 



Leave a Comment