நெல்லை காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு......


நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 25?ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. 

கர்ப்பிணிப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டிருந்த காந்திமதி அம்மனுக்கு பெண்கள் வளையல்கள் அணிவித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேளதாளம் முழங்க காந்திமதி அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட பிறகு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர்.

இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.
 



Leave a Comment