திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்லவ உற்சவம்.....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  பல்லவ உற்சவம் நடைபெற்றது. மைசூர் மகாராஜா பிறந்த உத்திராட நட்சத்திரத்தில்  ஒவ்வொரு ஆண்டும் பல்லவ உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி இன்று  மாலை சகஸ்கர தீப அலங்கார சேவை முடிந்த பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளினர். 

அங்கு கர்நாடக மாநில அரசின் பிரதிநிதிகளும் , மைசூர் சமஸ்தான பிரதிநிதிகள் கர்நாடக சத்திரத்தில் சுவாமி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் தேவஸ்தான சிறப்பு அலுவலர் பாலா சேஷாத்ரி,  போக்கசம் பொறுப்பாளர் குருராஜராவ், பார் பட்டதர் ராமசந்திர உள்ளிட்ட அதிகாரிகள் பக்தர்கள் பங்கேற்றனர்.

மைசூர் மகாராஜா நினைவாக கடந்த 300 ஆண்டுகளாக  பல்லவ உற்சவம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. முதலில் இந்த உற்சவத்தை தோட்ட உற்சவம் என அழைக்கப்பட்டு  வந்தது .வரலாற்று புராணத்தின் படி  ஏழுமலையானின் தீவிர பக்தரான மைசூர் மகாராஜா சுவாமியின் மீது கொண்ட பக்தியினால் பல நன்கொடைகளை வழங்கி உள்ளார். 

இதில் மூலவருக்கும், சுவாமி தாயார் உற்சவருக்கும் பிளாட்டினம், தங்கம், வைரம் ,வைடூரியம், மரகத பச்சை போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை வழங்கியுள்ளார். மேலும் பிரம்மோற்சவத்தில்  சுவாமி வீதி உலாவிற்காக கருட, கஜ,  முத்துப்பந்தல், சர்வ பூபால, குதிரை, சூரிய பிரபை, சந்திரப் பிரபை போன்ற வாகனங்களை நன்கொடையாக வழங்கினார். 

சாமியின் வாகன சேவையில் ஐந்தாவது நாள் காலை பல்லக்கு உற்சவத்திற்காக யானை தந்தத்தால் பல்லக்கு தயார் செய்து நன்கொடையாக வழங்கி தனது பக்தியை தெரியப்படுத்தினார். மேலும் தினந்தோறும் ஏழுமலையான் கோவிலில் காலை சுப்ரபாத சேவைக்கு முன்னதாக மைசூர் சமஸ்தானம் தரப்பில் நவநீத ஆரத்தி அகண்ட தீபத்திற்காக  தினந்தோறும் 5 கிலோ நெய் வழங்கும் சம்பிரதாயத்தை அவர் தொடங்கி வைத்தார் தற்பொழுதும் இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகிறது. 

மைசூர் மகாராஜா நினைவாக ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரம் அன்று இரவு ஏழு முப்பது மணிக்கு சிறப்பு ஆஸ்தானம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வருடாத்தில் முக்கிய நாட்களான உகாதி , தீபாவளி , ஆனிவார ஆஸ்தானம் போன்ற நாட்களில் மைசூர் மகாராஜா பெயரில் சிறப்பு ஆரத்தி வழங்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உறியடி உற்சவம் அன்றும் மலையப்ப ஸ்வாமி கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி பின்னர் கோவிலை வந்தடைவது வழக்கம்.



Leave a Comment