திருத்தணி ஆடிக்கிருத்திகை விழா ஏற்பாடுகள் தீவிரம்....
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை, தெப்பல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து காவடிகளுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பல பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்வர். விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதக் கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
லட்ச கணக்கான பக்தர்கள் கூடும், இத்திருவிழாவில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரும் வகையில், நகரின் முக்கியப் பகுதிகளிலும், கோயிலைச் சுற்றியும் தாற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதி, நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடையில்லா மின்சாரம் வழங்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், சரவணப்பொய்கை குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் விழாவில் அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் பிரமுகர்கள் அதிக அளவில் அமருவதால் ஏற்படும் இடையூறைக் கட்டுப்படுத்த, இந்த ஆண்டு முதல் இசைக் கலைஞர்கள், கோயில் குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் யாரும் தெப்பலில் ஏற அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment