நெல்லையப்பர் திருத்தேரின்  சிறப்புகள்....


தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.

நெல்லைத் தேர் கி.பி.1505இல் செய்யப்பட்டு இன்று வரை சுமார் 500 வருடங்களுக்கு மேலாகத் தடை எதுவுமின்றி ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது.

1948 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இது போல் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வரையிலும் இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதச் சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

4 வெளிச்சக்கரங்களும் 4 உள் சக்கரங்களும் கொண்டு தமிழகத்திலேயே அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.

முற்காலத்தில் இதன் மேல்பகுதியில் 9 தட்டுகள் இருந்ததாகவும் இப்போதுதான் அதனை 5 தட்டுகளாக குறைத்துவிட்டதாகவும் கூறுவர்.

சதுர வடிவிலான இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காள நாதர் குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றார். இவரை அடுத்து இராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது.

வலப்பக்கம் நடராஜர் நடனமாடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் கிழக்குப் பகுதியில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது.

தேரின் பின்னால் கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது.  தேரின் மேல் பகுதியில் அகத்தியர், முனிவர்கள்,யானை உரி போர்க்கும் இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் எனப் பல வகையான சிற்பங்களை நாம் காணலாம். மொத்தத்தில் இத்தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம். 



Leave a Comment