குலத்தினை காக்கும் குலதெய்வம்....


குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது.  அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.  

ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்து விடும்.  தங்களுக்கு வசதியான நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்.  இது மிகவும் தவறு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலம் தெரியாமல் கூட இருக்கலாம்.  ஆனால் குலதெய்வம் தெரியாமல் ஒருவர் இருக்கக்கூடாது.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

பலர் தங்களின் செல்வ செழிப்பில் குலதெய்வத்தினை மறந்து விட்டார்கள்.  விளைவு வாழ்க்கையில் கண்டங்கள் மற்றும் கஷ்டங்கள்.  அது மட்டுமல்லாமல் குலமே தழைக்காமல் போனதும் உண்டு.
 



Leave a Comment