திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி நாள் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு முடிக்கப்பட்டு ஆடி 1 ஆம் தேதி புதிய கணக்கு தொடங்கி பழைய கணக்குகள் சுவாமிக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. 

ஏழுமலையான் கோவிலில் உகாதி ( தெலுங்கு வருடப்பிறப்பு  ) , ஆனி வார ஆஸ்தானம் , வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நான்கு உற்சவங்களுக்கு முன்னதாக வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். 

இதனை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு நாளை ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் இன்று காலை 6 மணி முதல் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி,  செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆகியோர் தலைமையில் கோவிலில் உள்ள மூலவர் கருவறையில் பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் வகுலமாதா சன்னதி, யோக நரசிம்மர் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. 

இதையடுத்து பச்சைக்கற்பூரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மூலிகைகள் கலவைகளை கொண்டு கோவில் சுவற்றில் உள்ள அனைத்து இடங்களிலும்  தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மூலவர் சன்னதியில் அணிவிக்கப்பட்டிருந்த பட்டு வஸ்திரங்கள் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 



Leave a Comment