அவனியாபுரம் அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்....


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் 300 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க அவனியாபுரம் அய்யனார் திருக்கோவில் முப்பதாவது மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி கண்மாய் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ துர்க்காருடைய அய்யனார் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி இருப்பது தமிழ்நாட்டிலேயே இங்கு தான்.

திருக்கோவிலின் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜையுடன் கும்பாபிஷேக பூஜை துவங்கியது.

அதன் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட சிவாச்சாரியார்கள் புனித கும்பத்திலிருந்து கோபுர கலசத்தில்  புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இவ்விழாவில் அவனியாபுரம், பெருங்குடி, வில்லாபுரம். வல்லானந்தபுரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்து குடும்பத்துடன் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 



Leave a Comment