திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன முறை ராத்தாகிறது!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று விதமான விஐபி தரிசன முறையை ரத்து செய்யப்படும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். 

இதனால் அதிகமுறை சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆண்டில் ஒருமுறை மட்டுமே விஐபி தரிசனத்தில் செல்லும் விதமாக செய்யப்படும் எனவும் அவர் கூறி இருக்கிறார். 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் செயல்பட்டு வரக்கூடிய பர்டு மருத்துவமனையை அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி , திருப்பதி புறநகர் மேம்பாட்டு ஆணைய தலைவர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பர்டு மருத்துவமனையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலிருந்து உத்தரப்பிரதேசம் , ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

இங்கு சிகிச்சை பெறக் கூடிய நோயாளிகளுக்கும் அவர்களுடன் வரக்கூடிய உறவினர்களுக்கும் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். சுமார் 4 கோடியில் 40 அறைகள் கூடுதலாக கட்டப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

அறுவை சிகிச்சை மையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான ஆலோசனை செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த மருத்துவமனையை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். கடந்த வாரம் ஸ்ரீவாரி சேவா சதன் கட்டிடத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்து சிவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவாரி சேவா  தன்னார்வலர் குடும்பத்தினரை தேவஸ்தானம் சார்பில் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி அந்த குடும்பத்திற்கு துணையாக தேவஸ்தான நிர்வாகம் இருக்கும் என்றார் அவர். 

மேலும், ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்களில் எல் 1, எல்2,  எல் 3 என மூன்று ரகமாக பிரித்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த மூன்று தரிசன முறையும் ரத்து செய்யப்படும் என்று சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

முக்கிய பிரமுகர்களுக்கு அவரவர் பதவி மற்றும் தகுதிக்கேற்ப எவ்வாறு தரிசனம் செய்து வைப்பது என்பது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசித்து சாதாரண பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நல்ல முடிவை விரைவில்  எடுக்கப்படும். 

ஒரே ஆண்டில் அதிக முறை தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆண்டில் ஒரு முறை மட்டுமே தரிசனத்திற்கு வரும் விதமாக செய்யப்படும் என அவர் தெரிவித்தார். 

ஏற்கனவே  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது முக்கிய பிரமுகர்கள் ஆண்டில் ஒரு முறை மட்டுமே சாமி தரிசனத்திற்கு வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனால் சாதாரண பக்தர்கள் சிரமம் அடைவதைத் தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
 



Leave a Comment