மாங்கனித் திருவிழாவிற்கு தயாராகும் காரைக்கால்....
63-நாயன்மார்களில் ஒருவரும், அம்மையப்பன் இல்லாத இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவரும், அமர்ந்த நிலையில் இருப்பவருமான சிறப்பு பெற்ற காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாறு அனைவரும் அறிந்ததே.
அவரது கணவர் பரமத்தத்தர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றினை சிவனடியாருக்கு அமுதிட்டு பின்னர் கணவர் வந்து சாப்பிட கேட்ட இரண்டாவது மாங்கனியினை இறைவனிடம் வேண்டிப்பெற்றவர்.
இதனால் அவரது கணவர் பிரிந்து மதுரைக்கு சென்று மாற்றாளை மணந்து அவரது மகளுக்கு இவரது பெயரான புனிதவதியார் என்ற பெயரை சுட்டி இவர் தேடி வந்த போது இவரின் காலில் விழுந்து குடும்பத்தோடு வணங்கியதால் தனது உடலை உதிர்த்து பேயுறு வாங்கியவர் காரைக்காலம்மையார் என்றழைக்கப்படும் புனிதவதியார்.
பின்னர் இறைவன் உள்ள கைலாயமலையில் காலூன்றாமல் கைகொண்டு தலைகீழாக நடந்து சென்று அதன்பின்னர் திருவாலங்காட்டில் முக்திபேறு அடைந்தவர். இவர் இயற்றிய திருவிரட்டை மணிமாலை, திருவந்தாதி நூல்கள் தமிழுக்கு அவர் அளித்த கொடை. கர்நாடக இசைக்கு முன்னோடியாக விளங்கிய காரைக்காலம்மையார் தென்னக இசையின் தாய் என்று போற்றப்படுகிறார்.
ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக காரைக்காலில் ஆண்டு தோறும் மாங்கனித்திருவிழா நடைபெற்று வருகிறது. அம்மையார் இறைவனிடம் மாங்கனிப்பெற்றதன் நினைவாக பக்தர்கள் மாங்கனிகளை வேண்டிப்படைத்து அதனை வீசியெறிவதும் தாவிப்படிப்பதுமான நிகழ்வு இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாத அற்புதம்.
பிரசித்திபெற்ற மாங்கனித்திருவிழா காரைக்காலில் வரும் 13-ம் தேதி மாலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. முதல் நிகழ்வாக மாப்பிள்ளை அழைப்பு, அதனைத்தொடர்ந்து அடுத்தநாள் 14-ம் தேதி திருக்கல்யாணம், அன்று மலை சிவபெருமான் பிட்ஷாடணமூர்த்தியாக எழுந்தருளி வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைத்தல் 16-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக பிட்ஷாடண மூர்த்தியான சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தமர்ந்து வேதபாராயணத்துடன் வீதியுலா நடைபெறும். அப்போது பக்தர்கள் வேண்டுதலுக்காக மாங்கனிகளை வீசியெறியும் நிகழ்ச்சி நடைபெறும். இது வேறெங்கும் காண முடியாத அரிய நிகழ்ச்சியாகும்.
மாங்கனித் திருவிழாவையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயிலில் அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பந்தல்போடும் பணியும் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது பயன்படுத்தப்படும் பொம்மைகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் காரைக்காலின் மிகப்பெரும் விழாவான மாங்கனித்திருவிழாவிற்கு தீவிராமாக தயாராகிக் கொண்டிருக்கிறது காரைக்கால்.
Leave a Comment