திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.... 16 ஆம் தேதி 5 மணி நேரம் மட்டும் தரிசனம்....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16 ஆம் தேதி 5 மணி நேரம் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அன்றைய தினம் சர்வ தரிசனம் மற்றும் திவ்ய தரிசன டிக்கெட்டுக்கள் வழங்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது தேவஸ்தானம் அறிவிப்பு


17ஆம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4. 29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி சந்திர கிரகணம் ஏற்படும் ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. 

மேலும் 17 ஆம் தேதி ஆனிவார ஸ்தானம் எனப்படும் சம்பிரதாய முறைப்படி பழைய கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணிவரை கோவில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே  12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அன்று அனுமதிக்கப்பட உள்ளனர். 

மேலும் சந்திர கிரகணத்தையொட்டி அன்று மாலை 6 மணியுடன் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே 16ம் தேதி மதியம் 12 மணி முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே  அன்று ஆதார் அட்டை மூலமாக வழங்கக்கூடிய சர்வ தரிசனம் டிக்கெட் மற்றும் மலைப்பாதையில் நடந்து வரக்கூடிய பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் டிக்கெட் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. 

17 ஆம் தேதி சந்திர கிரகணம் நிறைவடைந்த பிறகு 5 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு  கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ,கொலுவு ஆகியவை ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து ஆனி வார ஆஸ்தான சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு மதியம் 12 மணிக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment