நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்த சிதம்பரம் நடராஜர்..... 


சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் நடந்தது. நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக நடனமாடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

பூலோக கைலாயமாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய ஸ்தலமாகவும் விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில். பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் இந்த ஆண்டிற்கான ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று நடந்த  தேரோட்டத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சாமிகள் தனித்தனி தேர்களில் நகர வீதிகளை வலம் வந்தது. பின்னர் நேற்று இரவு தேரிலிருந்து சாமி இறக்கப்பட்டு கோயிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டது..

இன்று அதிகாலையில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகாஅபிஷேகம் நடந்தது. பின்னர் திருவாபரண அலங்காரம், லட்சார்ச்சனை உள்ளிட்ட பூஜை மற்றும் அலங்காரங்களைத் தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜையும் நடந்தது. 

இதையடுத்து இன்று மாலையில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா நடைபெற்றது. அப்போது ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி சமேதமாக நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கருவறைக்கு சென்றது. இந்நிகழ்ச்சியின்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜர், சிவகாமசுந்தரியை பய பக்தியுடன் தரிசித்தனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.



Leave a Comment