திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம்
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 டன் மலர்களால் உற்சவமூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர புஷ்பயாகத்தையொட்டி நேற்று அங்குரார்ப்பணம் நடந்தது. இதில் உற்சவமூர்த்தி சேனாதிபதி நான்கு மாடவீதியில் பவனிவந்தார். அதைதொடர்ந்து சிறப்பு யாக சாலை அமைக்கப்பட்டு யாகம் நடந்தது.
புஷ்ப யாகத்தையொட்டி, காலை உற்சவமூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இருந்து கூடையில் வைக்கப்பட்ட மலர்கள் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமையில் அதிகாரிகள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் மதியம் 1 மணி முதல் 4 மணி வரை துளசி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மருவம், தாழம்பூ உள்ளிட்ட 12 ரகமான 3 டன் மலர்களால் உற்சவமூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு புஷ்ப யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்திகள் நான்குமாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புஷ்ப யாகத்திற்காக தமிழகம் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் நன்கொடையாக மலர்களை வழங்கினர். இதில் பங்கேற்ற செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களில் 25% என தினந்தோறும் 10 ஆயிரம் முதல் 24 ஆயிரம் பக்தர்கள் வரை கோவிந்தராஜ சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதற்கேற்ப பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மேம்படுத்தி வருகிறது. கோவிந்தராஜா சுவாமி கோவிலில் கடந்த மாதம் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அர்ச்சகர்கள், பணியாளர்கள், பக்தர்கள் மூலமாக ஏற்பட்ட தோஷங்களுக்கு பரிகாரமாக இந்த புஷ்ப யாகம் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.
Leave a Comment