திருச்செந்தூர் கோயிலில் குறைவான விலையில் தரமான பிரசாதம்.....
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக கோவில் பிரசாத விற்பனை நிலையம் மூலம் குறைந்த விலையில் பிரசாதங்கள் விற்பனை தொடங்கி இருக்கிறது.
இந்து சமய அறநிலையதுறை கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஏலம் முறையில் தனியார்க்கு குத்தகைக்கு விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பிரசாத விற்பனையில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் பிரசாதங்கள் தரம் குறைவாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் முதல் நிலை கோவில்களில் பிரசாதம் மற்றும் பஞ்சாமிர்தங்களை நேரடியாக கோவில் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து உலகப்புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கோவில் பிரசாத விற்பனை நிலையம் மூலம் நேரடி பிரசாத விற்பனையை இணை ஆணையர் குமரதுரை தொடக்கி வைத்தார்.
இதன்மூலம் ரூ 50 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த லட்டு , புளியோதரை , சர்க்கரை பொங்கல் , தேன்குழல் மற்றும் பிரசாத பை உள்ளிட்ட பிரசாத பொருட்கள் பக்தர்கள் வசதிக்காக பத்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்கப்படுகிறது. குறைந்த விலையிலான பிரசாதங்களை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
கோவில் பிரசாதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது பக்தர்களிடம் வரவேற்றை பெற்றது. இதனையடுத்து கோவிலில் விரைவில் பஞ்சாமிர்தம் விற்பனையும் பக்தர்களின் வசதிக்காக நேரடி விற்பனையில் தொடங்கும் என கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார்.
Leave a Comment