கோவிந்தா கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட.... கோலாகலமாகத் தொடங்கியது அத்திவரதர் தரிசனம்... 


நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் தேவராஜர் கோயில் தரிசன திருவிழா கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது.  கடந்த ஒரு மாதமாகவே காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்துக்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 

கடந்த 27-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அனந்த சரஸ் குளத்திலிருந்து அத்திவரதரை வெளியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைத்தனர். சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதர் சிலையை சுத்தம்செய்து, அவருக்கு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 11 மணிக்கு புண்ணியாக வாசனம், ஜலசம்ரோஷம், தைலக்காப்பு, ஹோமம் ஆகிய பூஜைகள் முடித்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி தரிசனம் கொடுக்கும் வசந்த மண்டபம் பூக்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு மிக எழிலுடன் காணப்பட்டது.

அதிகாலை 2.45 மணிக்கு அத்திவரதர் சிலை மைய மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. இதனை அடுத்து, பக்தர்கள் தரிசனம் தொடங்கியது.


ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் பக்தர்கள் அணி திரண்டு வந்துள்ளனர்.
 



Leave a Comment